அரசியல்யாப்பிலுள்ள அதிகாரங்களை 21இன் மூலம் நிரந்தரமாக நடைமுறைப்படுத்த முயல வேண்டும்: ரெலோ! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 24, 2022

அரசியல்யாப்பிலுள்ள அதிகாரங்களை 21இன் மூலம் நிரந்தரமாக நடைமுறைப்படுத்த முயல வேண்டும்: ரெலோ!

 அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21ஆவது திருத்தச்சட்டம் மூலம் நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நாம் முயல வேண்டும் என ரெலோ அமைப்பினுடைய ஊடக பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தெற்கின் அரசியல் நகர்வுகளில் கருத்து தெரிவிப்பதில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான 21ஆவது திருத்தச் சட்ட மூல பரிந்துரைகள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.

ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிந்து இருப்பதை எதிர்த்து தமிழ்த் தேசியத் தரப்புகள் ஒருமித்த அறிக்கை ஒன்றையும் அண்மையில் வெளியிட்டிருந்தோம். ஜனாதிபதியின் எதேச்சாதிகாரப் போக்கை இல்லாதொழிக்க இது உதவும்.

அரசியல்யாப்பிலுள்ள அதிகாரங்களை 21இன் மூலம் நிரந்தரமாக நடைமுறைப்படுத்த முயல வேண்டும்: ரெலோ

நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குவது ஜனநாயகத்தை உறுதி செய்யும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அல்லது நாடாளுமன்றம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வினை கடந்த காலங்களில் வழங்கத் தவறியுள்ளன.

இந்த திருத்தங்கள் ஊடாகத் தமிழ் மக்களுக்கு உறுதியாகப் பெற்றுத் தரக்கூடிய அதிகார விடயங்களைத் தமிழ் அரசியல் தரப்பினர் கையாள முன்வர வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட இருக்கும் 21ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதோடு ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வினை நிரந்தரமாகவும் மீளப் பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கும் வழி செய்ய வேண்டும்.

ஏற்கனவே அரசியல் யாப்பில் கூறப்பட்ட அதிகாரங்களை வலுப்படுத்தி, மீள் நிறுத்தி முற்றாகப் பகிர்வதற்கு முன்மொழியப்பட இருக்கும் 21 ஆவது திருத்தச் சட்டத்தைத் தமிழ்த் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய அரசியல் யாப்பின் மூலமே இதைச் செய்யமுடியும், மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பல சாக்குப் போக்கினை ஆளும் தரப்பினர் சொல்ல முற்படுவார்கள். ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை முற்று முழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியல் யாப்பு அல்லது மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை.

திருத்தங்களின் மூலமே அவற்றைச் செய்து கொள்ள முடியும். அரசியல் யாப்பில் இல்லாத நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு 20 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது மக்கள் வாக்கெடுப்பு தேவைப்படவில்லை.

ஆனால் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை எனக் கூறி தப்பித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? புதிய அரசியல் யாப்பு, பொதுஜன வாக்கெடுப்பு என்பன நாம் கோருகின்ற நிரந்தரமான சமஷ்டி முறையான அரசியல் தீர்வை வழங்குவதற்கே அவசியம் என்பதைத் தமிழர் தரப்பு வலியுறுத்த வேண்டும்.

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் ஆர்வத்தோடு தினமும் நாடாளுமன்றத்திற்குக் கருத்து தெரிவித்து வருவது தமிழ் மக்களுக்கு நலன் பயக்காது.

அங்கு ஆக்ரோஷத்தோடு எதிர்க் கருத்து தெரிவிப்பதும் பிரேரணைகளை முன்வைப்பதும் அவர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருபுறம் இருக்க கொண்டுவரப்பட இருக்கும் 21 ஆவது திருத்தத்தில் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை முற்றாகப் பகிர வலியுறுத்த நாம் முயல்வது ஆக்கபூர்வமானதாக அமையும்.

ஏற்கனவே அரசியல் யாப்பில் அதிகாரங்கள் பல வழங்கப் பட்டு உள்ளன. அவை நிரந்தரமாக்கப்படவும் இல்லை. பகிரப்படவும் இல்லை. முற்றாக நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் அரசியல் யாப்பில் உள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளியைக் காண்கிறோம்.

ஜனாதிபதி முறைமையில் அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட விடயங்களை அரசாங்கம் முற்று முழுதாக நடைமுறைப் படுத்துகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்று வருகின்ற பொழுது இருப்பதையே நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் பின் நிற்கின்றது.

ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளவற்றுக்கும் நடைமுறைப் படுத்துவதற்குமான இடைவெளியைச் சீராக்கி முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை கையாள்வது எமது கடமை. ஏனெனில் எதிர்காலத்தில் சமஷ்டி முறையான தீர்வு அரசியல் யாப்பில் கொண்டு வரப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தைச் சரியான முறையில், சிறப்பாக ஒருமித்து நின்று கையாள்வதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தயவுடன் அழைக்கின்றோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

M.M.Nilamdeen -

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here