
( எம்;.எம்;.நிலாம்டீன் )
யுத்தத்தில் எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்றுவிட்டு நாம் யுத்த வெற்றிவிழாக் கொண்டாட முடியாது. விடுதலைப்புலிகள் என்றாலும் அவர்களும் இலங்கையர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சிங்கள யுத்த வெற்றிவிழா எனக்கூறி மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரம்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
யுத்தத்தில் உயிரிழந்த மக்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர வடக்கில் மக்களுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்பிய இடங்களில் அவர்களை நினைவுகூர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சினால் நேற்று இலங்கை தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை பயங்கரவாதம், இனவாதம், அனர்த்தம் என சகல சிக்கல்களுக்கும் முகம்கொடுத்த நாடு. எனினும் அனர்த்தங்கள் ஏனைய சிக்கல்களை அனைத்தையும் விடவும் யுத்தமே நாட்டுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியது. அவ்வாறன நிலையில் கடந்த காலங்களில் போர்வெற்றி தினத்தை இராணுவ வெற்றி தினமாக கொண்டாடி வந்தபோதிலும் இம்முறை வெற்றி தினமாக கொண்டாடாது விடுதலை தினமாக கருதியும் யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்கள், பொதுமக்களை நினைவேந்தியும் அனுஷ்டிக்கப்படும்.
கடந்த காலங்களில் போலன்றி இப்போது நாட்டில் நில்லிணக்கம், சகவாழ்வு பற்றிய செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் சகல மக்களையும் உள்ளடக்கிய வகையில் அனுஷ்டிக்கபடும்.
இந்த போர்வெற்றி தினத்தில் ஆடம்பரமான எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்காது சாதாரணமாக முப்படை அணிவகுப்பும், பொலிஸ் மற்றும் சிவில் துறையின் அணிவகுப்புகளும் நடைபெறும். அதேபோல் கலை நிகழ்சிகள், மற்றும் இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கௌரவம் செலுத்தும் நிகழ்வுகள் மட்டுமே இடம்பெறும். ஜனாதிபதி தலைமை தாங்கும் இந்த நிகழ்வில் மேல்மாகாண அரசியல் பிரமுகர்கள், மாகாணசபை, பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.
வடக்கில் விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் நிகவுகள் நடைபெறும் என பிரச்சாரம் செய்துவந்தாலும் அதில் எந்த உண்மைகளும் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்த மக்களை அனுஷ்டிக்கவே அவர்கள் ஒன்றுகூடுவதாக கூறியுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் புலிகளை நினைவேந்தும் நடவடிக்கையாக அமையாது என குறிப்பிட்டுள்ளனர். யுத்தத்தில் உயிரிழந்த மக்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்பிய இடங்களில் அவர்களை நினைவுகூர முடியும்.
மேலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளை யுத்த வெற்றிநாளாக கொண்டாட வேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கொண்டாட நாம் தயாராக இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாக இருந்தால் நாம் வெற்றிபெற்றதை கொண்டாட முடியும். ஆனால் இது ஒரு நாட்டினுள் சகோதர இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல். இதில் எமது சகோதர உறவுகள் தான் கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் ஆயுத இயக்கமாக இருந்தாலும் கூட அவர்களும் இலங்கையர்கள். அவர்களும் ஏதோ ஒரு உரிமைக்கான போராட்டமாக இதை முன்னெடுத்தனர். மக்கள் விடுதலை முன்னணியினால் 1979ஆம் ஆண்டு வன்முறை போராட்டம் எடுக்கப்பட்டபோதிலும் இன்று அவர்கள் ஏனைய கட்சிகளை விடவும் வித்தியாசமான ஜனநாயக வாதிகளாக தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். அவர்களின் அரசியல் பிரவேசம் பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோலவே விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன. எனினும் இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது சகோதரர்களை கொன்றுவிட்டு நாம் வெற்றிவிழா கொண்டாட தயாராக இல்லை. இலங்கையர் என்ற வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இன்று வடக்கில் மக்கள் மத்தியில் நல்ல ஜனநாயக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரம்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றார்.