ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஹோமகம நீதிவான் நீதிமன்ற நீதிவான், குறிப்பிட்ட இரண்டு புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் சானி அபேசேகர, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எந்த தகவல்களையும் வெளியிடக் கூடாது என்று தாம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக முதலாம் மற்றும் இரண்டாவது சந்தேக நபர்கள் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
எனவே, முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தேக நபர்களை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் 22ஆம் நாளுக்கு ஒத்திவைத்தார்.
MM.NIlamdeen